மனதை அடக்குவது எப்படி


மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம்
தவறு என்று தெரிந்தும் சிலர் தவறுகள் செய்வார்கள், தவறு என்று தெரியாமல் சிலர் தவறுகள் செய்வார்கள். தவறு செய்வதும், பின்பு அதை நினைத்து வருந்துவதும். மீண்டும் தவறு செய்யக் கூடாது என்று நினைப்பதும், மறுபடியும் அதே தவறு செய்வதும், பலருக்கு தொடர்கதையாகவே இருக்கிறது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு மனிதர்களும் ஏதாவது ஒரு வகையான தவற்றை தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருப்பார்கள்.

சிலர் தீய பழக்கம் என்று தெரிந்தும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டும், அதை விட முடியாமல் அவதிப்படுவார்கள். சிலர் இன்றோடு இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப்போயிருப்பார்கள்.

  • இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன காரணம்?.
  • மனிதர்கள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்?.
  • அதுவும் தவறு என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்?.
  • தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்தும் அவர்களை மீறி தவறுகளை செய்வது ஏன்?.
  • மனிதர்களை தன்னையும் மீறி தவறுகள் செய்ய தூண்டுவது எது?

மேலே உள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான், மனம். மனிதன் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் அவனது மனம்தான் காரணமாக இருக்கிறது. மனிதன் தனது ஐம்பொறிகளான காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் உணர்வதன் மூலமாக அவனது மனதில் ஏற்படும் பதிவுகளே, அவனை தவறுகள் செய்ய தூண்டுகின்றன.

மனதுக்கு சரி தவறு என்ற பேதம் தெரியாது அவனது ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனைத்தையும் மனதில் பதிவு செய்துகொள்கிறது. அந்த பதிவுகளினால் தோன்றும் எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப மனம் வேலை செய்கிறது. இந்த பதிவுகள் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்படும் வேளைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

மனதின் தன்மை
இன்று ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு இன்றோ நேற்றோதான் மன பதிவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இல்லை. என்றோ சிறுவயதில் அவன் மனதில் பதிந்த பதிவுகள் கூட அவன் 40 வயதில் தவறுகள் செய்ய காரணமாக இருக்கலாம்.

மனதை கட்டுப்படுத்த முடியாதா? மனதை அடக்க முடியாத?. இந்த கேள்வி அனைவராலும் பல காலங்களாக கேட்கப்பட்டு வருகிறது. மனதை அடக்கவும் அதை கட்டுப்படுத்தவும் பலர் பயிற்சிகளும் கொடுக்கிறார்கள். உண்மை என்னவென்றால். மனதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது.

நாம் பல இதிகாசங்களிலும் புராணங்களிலும் படித்திருப்போம், பெரிய முனிவர்கள் கூட மன இச்சைக்குக் கட்டுப்பட்டு தவறுகள் செய்ததை. இன்று தினமும் நாளிதழ்களிலும் இணையத்திலும் பார்க்கிறோம். உயர்ந்த இடத்தில் இருக்கும் பலர் தங்கள் தகுதிக்கு சம்பந்தமில்லாத ஈன செயல்களை செய்வதை. இவை அனைத்துக்கும் காரணம் அவர்கள் ஐம்பொறிகளின் உதவியுடன் அவர்கள் மனதில் உருவான பதிவுகள் தான்.

மனதை கட்டுக்குள் வைக்கும் ஒரே வழிமுறை
அப்படியானால் மனதை கட்டுப்படுத்த வழியே இல்லையா என்று கேட்டால்?. ஒரேயொரு வழி இருக்கிறது. அதுதான் மனதினுள் பதிவுகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது. மனதில் உருவாகும் பதிவுகள்தான் மனிதர்கள் தவறுகள் செய்யக் காரணமாக இருக்கிறது, அந்த தவற்றை செய்ய தூண்டக்கூடிய பதிவுகள் உண்டாகாமல் பார்த்துக்கொண்டால் போதும் மனதினுள் தீய எண்ணங்கள் உண்டாகாது.

உதாரணத்துக்கு விருப்பமான உணவு எது என்று யாரையாவது கேட்டால் அவர் மனபதிவில் எந்த உணவின் அனுபவம் இருக்கிறதோ, அவற்றில் எது மிகவும் அவரை கவர்ந்ததோ அதை சொல்வார்கள். ஒருவர்கூட, அவர் சுவைத்து கண்டிராத உணவை கூறமாட்டார். அதைப்போல் ஒருவரிடம் உலகிலேயே உனக்கு பிடித்த நபர் யார் என்று கேட்டால், அந்த நபரின் வாழ்கையில் குறுக்கிட்ட அவர் அனுபவத்தில் இருக்கும் யாராவது ஒரு நபரைக் கூறுவார். யாருமே தனக்கு சம்பந்தமில்லாத தான் அறிந்தில்லாத ஒரு நபரைப் பற்றி கூறமாட்டார்.

ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்குக் காரணம் அவர் மனதில் இருக்கும் பதிவுகள் மட்டுமே. மன பதிவுகளே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால். நிரந்தரமான விருப்பு வெறுப்பு என்று யாருக்கும் இருக்காது. மன பதிவுகள் மாற மாற அவர்களின் உணர்வுகளும், ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கைமுறையும் இருக்கும்.

தற்போது இருக்கும் தவறான பதிவுகள்
இதுவரையில் சேர்ந்த மனப்பதிவுகளை அழிக்கவோ மாற்றவோ எவராலும் முடியாது ஆனால் அந்த தேவையற்ற பதிவுகளை தவிர்க்க முடியும். சிறுவயது முதல் சேர்த்த மனப்பதிவுகள் அனைத்தும் மனதினுள் அப்படியேதான் இருக்கும், தற்போது அந்த தவறான பதிவுகள் சம்பந்தமாக புதிய பதிவுகள் எதுவும் உருவாகவில்லை என்றால், பழைய பதிவுகள் மெல்ல மெல்ல செயல் இழந்துவிடும்.

உதாரணத்துக்கு வெளிநாடுகளுக்கு வேலைக்கும் சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து மீண்டும் தாய்நாடு திரும்பியதும். பழைய நபர்களின், உறவுகளின் பெயர்களை நினைவுகூர சிரமப்படுவார்கள். தான் பிறந்து வளர்ந்த ஊறுக்குள்ளேயே பாதை தடுமாறுவார்கள். பணத்தைக்கூட தான் பணிப்புரிந்த நாட்டின் நானையத்தின் பெயரால் அழைப்பார்கள். இந்த தடுமாற்றங்களுக்கு காரணம் அந்த நபரின் பழைய பதிவுகள், பல வருடங்கள் பயன்படுத்தாததால் செயல் இழந்துவிட்டன.

அதைப்போல் நாம் இனிமேல் பதியும் புதிய பதிவுகளை முறையானதாகவும், சரியானதாகவும் வைத்துக்கொண்டால், மனதின் நிலையும் பழக்க வழக்கங்களும் முறையானதாக மாறிவிடும். இதுவரையில் இருந்த தவறான பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்ல நம்மை விட்டு நீங்கிவிடும்.


No comments:

Post a Comment