தூக்கம் யாருக்கு எப்போது வரும்?


வெகுநேரம் வாகனங்களை ஓட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் இருக்க வாய்ப்புகள் அதிகம். இரவில் நீங்கள் வெகுநேரம் வாகனம் ஓட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். வாகனம் ஓட்டும் போது, உறங்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ நிற்சயமாக இருக்கப்போவதில்லை. போக வேண்டிய இடத்துக்குப் பாதுகாப்பாக போய் சேரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும், அவ்வாறு இருக்கும் போது, வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏன் தூக்கம் வருகிறது?.

கார் மட்டுமல்லாமல், லாரி, பஸ், ஆட்டோ, அவ்வளவு ஏன் பைக் ஓட்டும் போது தூங்கி விபத்துக்கு உள்ளானவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன். கார் சத்தமின்றி அமைதியாக இருக்கும் அதனால் தூங்கி விடுகிறார்கள் என்று வைத்துக்கொண்ட்டல் கூட பைக் ஓட்டுபவர்கள் ஏன் தூங்குகிறார்கள்?. சாதாரண நேரத்தில், வீட்டில் உறங்கும் போது, சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக்கொள்வோம். அவ்வாறு இருக்கையில்; பைக்கின் சத்தம், மற்ற வாகனங்களின் சத்தம் மற்றும் காற்றின் அழுத்தம் அனைத்தையும் மீறி எவ்வாறு தூங்குகிறார்கள்?.

சற்று சிந்தியுங்கள் இதற்கு ஏதாவது சிறப்பு காரணங்கள் இருக்க முடியுமா?. இல்லை, வாகனங்கள் ஓட்டும் போது தூங்குவதற்கு காரணம், தூக்கம் நாம் ஆசைப்படும் போது வருவதில்லை, மாறாக நமக்கு தேவைப்படும் போது வருகிறது. நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அது எவ்வளவு முக்கியமாக வேலையாக இருந்தாலும் கவலையில்லை, உடலில் சக்தி தட்டுப்பாடு ஏற்பட்டால், தூக்கம் தானாக வந்துவிடும். யாருடைய அனுமதியும் கோரி நிற்காது. அதை மீறித் தூக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

குழந்தைகளை சற்று கவனித்தால் புரியும். குழந்தைகள் சாப்பிடுவது, விளையாடுவது என்று எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் வந்தால் அப்படியே தூங்கி விடுவார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்கிறேன் என்ற பெயரில், குழந்தைகளை வற்புறுத்தித் தூங்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகள் தூங்காமல் அடம்பிடிப்பார்கள். சில தாய்மார்கள் தூக்கத்தை மீறி குழந்தைகளை படிக்க சொல்வார்கள். இரண்டுமே தவறான அணுகுமுறையாகும்.


குழந்தைகளை கவனித்தால் புரியும், குழந்தைகள் உடலை எதிர்த்து எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். உடல் என்ன சொல்கிறதோ கட்டுப்படுவார்கள், காரணம் அவர்கள் இயற்கையோடு இணைந்து இருக்கிறார்கள், பெரியவர்கள் ஆக ஆக இயற்கையை விட்டு விலகி வருவதால், உடல் என்ன சொல்கிறது என்று பலருக்கு விளங்குவதில்லை. உடலின் பாசை புரியாமல், உடலை எதிர்த்து செயல்பட்டு, நோய்வாய்ப் படுகிறார்கள்.

தூக்கம் நம் இஷ்டத்துக்கு வராது
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்று பலர் எனக்கு சரியான தூக்கம் இல்லை, தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறேன் என்று கூறுவதற்கு காரணம் அவர்கள் அவர்களை சுற்றி இருப்பவர்களுடன் அவர்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தன்னுடன் ஒரே வீட்டில் வாழ்பவர்கள் 10 மணி நேரம் தூங்கினால், தானும் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது முடியாத போது தனக்கு நோய் உள்ளதாக கற்பனை செய்ய தொடங்குகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு 5 மணி நேர தூக்கமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக உடல் தூங்காது. உடல் உழைப்புக்கும் சக்தியின் தேவைக்கும் ஏற்பவே தூக்கத்தின் அளவு இருக்கும்.

உடல் உங்கள் சொல் கேட்டு நடக்காது நீங்கள் தான், உங்கள் உடலின் சொல் கேட்டு நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment