சிறந்த உணவு பழக்கம்

எவையெல்லாம் ஆரோக்கியமான, உடலுக்கு உகந்த உணவுகள் என்று தெரிய வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவு என்றால் என்னவென்று முதலில் தெரியவேண்டும். ஆரோக்கியம் என்றால் என்னவென்றும் புரிய வேண்டும்.

எந்த நோயையும், எதிர்வினையையும், எந்த உடல் - மன பாதிப்பையும் உருவாக்காத உணவு வகைகள் தான் ஆரோக்கியமான உணவுகள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? என்றால், அது முடியாது. எந்த தீய எதிர்வினையையும் உருவாக்கவில்லை என்றாலும், உடலுக்கு எந்த நன்மையையும் வழங்காத உணவை எதற்காக சாப்பிட வேண்டும்?. அவ்வாறென்றால் எவை ஆரோக்கியமான உணவு வகைகள்?.

எந்த உணவாக இருந்தாலும், உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களையும், சக்தியையும் வழங்குமென்றால், அவற்றை சாப்பிடுபவரின் உடல் அவற்றை முறையாக ஜீரணிக்கும் என்றால், அவை நல்ல உணவுகள்தான். தாராளமாக சாப்பிடலாம்.

உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள்
தொடர்ந்து வாசிக்கும் முன்பாக சற்று சிந்தனை செய்யுங்கள். இரசாயனங்களும், உயிர் கொல்லிகளும் கலக்கப்படாத உணவுகள் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா?. சிந்தித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்.

நாம் அருந்தும் நீரில் இருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், மீன் வகைகள், அரிசி, பருப்பு, தானியங்கள், மசாலா பொருட்கள், சமையல் பொருட்கள், எண்ணைகள், என அனைத்திலும் கலப்படம், இரசாயன கலவைகள். இனி எதை சாப்பிடுவீர்கள்?.

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் இருந்து, முதியவர்களுக்குக் கொடுக்கப்படும் சத்து மாவுகள் வரையில் அனைத்திலும் கலப்படம், இரசாயனம் இனி எவற்றைக் கொடுப்பீர்கள்?.

உணவில் கலப்படம் இரசாயனம்
உங்கள் உணவை நீங்களே பயிர் செய்தால் ஒழிய கலப்படத்தையும் இரசாயனங்களையும் தவிர்க்க முடியாது. இன்னும் ஒரு முக்கியமான விசயம், பயிர் செய்தது நீங்கலாக இருந்தாலும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தெளிக்காவிட்டாலும், நீங்கள் விதைத்த தாவரத்தின் விதைகளை உருவாக்கியது யார் என்று பார்க்கவேண்டும். விதைகள் மரபணு மாற்றப் பட்டதாக இருக்கலாம்.

Organic Foods ஒர்கானிக் உணவுகள்
ஒர்கானிக் உணவுகள் என்றால் என்ன?. பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இரசாயனம் தெளிக்கப்படாத உணவுகள். சரி, பூச்சிக்கொல்லியும் இரசாயனமும் நீங்கள் தெளிக்கவில்லை, ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இயற்கை உரத்தை உருவாக்க பயன்படும் ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் உணவில் இரசாயனம் கலக்கப்பட்டிருந்தால் அந்த இரசாயனம் நீங்கள் பயன்படுத்தும் உரத்திலும் இருக்கும்தானே, உரத்தில் இருக்கும் இரசாயனம் பயிர்களிலும் கலக்கும் தானே?. இனி அது எப்படி ஒர்கானிக் உணவுகள் ஆகும்?.

உணவை உற்பத்தி செய்த பின், அதை  பொட்டலம் போட, கெட்டுப்போகாமல் தடுக்க, அதை பாதுகாக்க சிறிதளவேனும் இரசாயனம் கலக்கப்படும் தானே?.

கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான ஒர்கானிக் உணவுகள், உண்மையான இயற்கை உணவு வகைகள் அல்ல. இரசாயனமும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் குறைவானவை, மனிதர்களுக்கு நேரடியான கெடுதல்களை செய்யாதவை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இப்படி அனைத்து வகையான உணவிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இரசாயனங்களும் கலக்கப்படும் போது எவற்றை சாப்பிடுவீர்கள்.

அவர் அதில் இரசாயனம் இருக்கும் என்று சொன்னார் இவர் இதில் பூச்சிக்கொல்லிகள் இருக்கும் என்று சொன்னார் என்று நாம் கூறலாம். எல்லாம் சரி, அனைத்திலும் பூச்சிக்கொல்லியும் இரசாயனமும் இருக்கும் போது, எதை சாப்பிட வேண்டும் என்று அவர் கூறினாரா?.

உலகத்தில் சிறந்த உணவுகள் தேன், தேங்காய், பழங்கள், கருப்பட்டி ஆனால் இன்று இவை அனைத்திலும் கலப்படம், பூச்சிக்கொல்லி, மெழுகு, சரி இனி எவற்றை சாப்பிடுவது?.

சிறந்த உணவு பழக்கம்
எவற்றை சாப்பிடுவது என்று ஆராய்ந்து, எதில் எதில் என்ன என்ன இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்று ஆராய்வதை விட, எப்படி சாப்பிடுவது என்று அறிந்துகொள்ளுங்கள். மற்றதை உங்கள் உடல் கவனித்து கொள்ளும்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே உடலுக்கு ஒவ்வாத ஒரு உணவை சாப்பிட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? அது உடலுக்குள்ளேயே இருக்குமா அல்லது உங்கள் உடல் அதை வெளியேற்றிவிடுமா?.

உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடும் போது, வாந்தி மற்றும் வயிற்று போக்கு மூலமாக அவை வெளியேற்றப் பட்டு விடுகின்றன அல்லவா?. அமிர்தமாகவே இருந்தாலும், உடலுக்கு ஒவ்வாதது என்றால் உங்கள் உடல் தானாகவே அவற்றை வெளியேற்றிவிடும்.  அப்பறம் என்ன பயம். உங்கள் உடலுக்குத் தெரியாத விசயமா உங்களுக்குத் தெரிந்துவிட போகிறது?.

உணவு உண்ணும் முறை
நீங்கள் என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எந்தத் தொந்தரவும் உருவாகக் கூடாது என்றால், முதலில் உணவு உண்ணும் முறையைக் கற்றுக்கொள்ளுங்கள்.
1. சாப்பிடுவதற்கு முன்பாக உணவைப் பாருங்கள்
2. உணவின் வாசனையை நுகருங்கள், வடிவத்தை ரசியுங்கள்.
3. விரல்களால் நன்றாக பிசைந்து பின்பு உண்ணுங்கள்
4. வாயில் போட்டு, எச்சில் கலந்து, நன்றாக மெல்லுங்கள்
5. மென்று உணவின் ருசி மாறிய பிறகு விழுங்குங்கள்
6. சாப்பிடும்போது தண்ணிர் அருந்தாதீர்கள்.

இவை ஆறையும் முறையாக செய்தால். உடல் உணவை முறையாக ஜீரணித்து, எல்லாக் கழிவுகளையும், இரசாயனங்களையும் முறையே வெளியேற்றிவிடும். இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், கலப்படங்கள் பற்றிய பயம் தேவையில்லை.

No comments:

Post a Comment